இந்த திரைப்படத்தை சில வாரங்களுக்கு முன்பே பார்த்துவிட்டேன். இருந்தாலும் நேற்று நண்பர் பரிதி, தோழி நாயகி மற்றும் அவரது கணவருடன் மீண்டும் ஒரு முறை பார்க்க சென்றேன். இந்த திரைப்படம் பெண்கள் அனைவரும் கண்டிப்பாக காணவேண்டிய திரைப்படம் என்று தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால் என்னுடைய கருத்து, பெண்கள் மட்டும் அல்ல, ஆண்களும் அவசியம் காணவேண்டிய திரைப்படம். இன்றைய காலகட்டத்தில் ஒரு சில இயக்குநர்கள் மட்டுமே சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி திரைப்படங்கள் எடுக்கின்றனர், அந்த வகையில் இயக்குநர் மிஷ்கின் ஒருவர். இவரது இயக்கத்தில் வந்த அஞ்சாதே திரைப்படம் கொடுத்த பிரமிப்பில் இருந்து வெளிவரவே எனக்கு பல நாட்கள் ஆனது. அந்த அளவுக்கு யதார்த்தமாக காவல் துறையில் பணி புரிபவர்களின் வாழ்க்கை முறையை காட்டி இருந்தார். எனது தந்தை காவல் துறையில் பணியாற்றுவதால் அந்த வாழ்க்கையை பற்றிய புரிதல் எனக்கு உண்டு. அதே போலத்தான் இந்த திரைப்படத்திலும் காவல் துறையை பற்றியும், பெண்கள் எவ்வளவு விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என்பதை பற்றியும் காட்டியுள்ளார்.
இயக்குநர் சேரன் இந்த திரைப்படத்தில் CB-CID அதிகாரியாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு இவர் தான். இவரது இயக்கத்தில் இவர் நடித்த படங்களை விட, இந்த படத்தில் இவரது நடிப்பு அருமை. இந்த படம் பரபரப்பூட்டும் காட்சிகள் அடங்கிய அடுத்த காட்சியில் என்ன நடக்கும் என்று யோசிக்க வைக்கும் காட்சிகள் நிறைந்த திரைப்படம். திரைப்படத்தில் யதார்த்ததிற்காக பல காட்சிகளை நடைமுறை வாழ்க்கையில் நடப்பது போல அப்படியே எடுத்துள்ளார்கள், முக்கியமாக பினவறை காட்சிகள். எனக்கு பினவறைக்குள் சென்றுவந்த அனுபவம் உள்ளதால் இந்த கருத்தை சொல்கிறேன். ஆகையால், இந்த திரைப்படத்தை காண கொஞ்சம் மன வலிமை வேண்டும். எங்களுடன் வந்திருந்த தோழி பினவறை காட்சிகள் வந்த போதெல்லாம் கண்களை மூடிக்கொண்டார் :)
அது சரி, திரைப்படத்தின் கதை என்ன.....?
நகரத்தில் ஆட்கள் அதிகம் நடமாடும் முக்கியமான இடங்களில் சில ஆண்களின் கைகள் மட்டும் வெட்டப்பட்டு ஒரு அட்டை பெட்டிக்குள் வைத்து வைக்கப்படுகிறது. இது தொடர்ந்து நடப்பதால், இந்த வழக்கு CB-CID துறைக்கு மாற்றப்படுகிறது. சேரனின் (JK) உயர் அதிகாரி இந்த பணியை சேரனிடம் கொடுக்கும் போது, அதனை ஏற்க மறுக்கிறார். ஏனென்றால், அவரது தங்கை மர்மமான முறையில் காணாமல் போய் இருப்பார். அவரை கண்டுபிடிக்க முடியாததால் அந்த வழக்கை முடித்துவிட்டார்கள். சேரனின் உயர் அதிகாரி, அவரது தங்கையின் வழக்கை மறுபடியும் துறக்க ஒப்புதல் அளித்ததால் இந்த புதிய வழக்கை ஏற்க சம்மதிக்கிறார். கைகளை வெட்டும் அந்த குற்றவாளிகளை கண்டுபிடித்தாரா? காணாமல் போன தனது தங்கையை கண்டுபிடித்தாரா? என்பதை திரைப்படத்தில் கண்டுகளியுங்கள்.
இந்த திரைப்படத்தில் அனைவரின் நடிப்பும் அருமையாக இருந்தது. முக்கியமாக ஜுடாசாக நடித்த ஜெயபிரகாஷ் நடிப்பு அற்புதம். அதே போல், லக்ஷ்மி மற்றும் Y.G.மகேந்திரன் நடிப்பும் அருமை. வெகு நாட்களுக்கு பிறகு நடிகர் செல்வா நடித்துள்ளார். படத்தில் நான் மிகவும் ரசித்த காட்சிகள் பல, அவற்றுள் சில கீழே...
சேரன் எதிரிகளுடன் நகவெட்டியை வைத்து கொண்டு போடும் சண்டை காட்சி, வல்லவனுக்கு நகவெட்டியும் ஆயுதம் என்பதை தெளிவு படுத்துகிறது.
ஒரு முறை காவல் துறையில் பணிபுரியும் ஒரு அதிகாரி பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது, காவல் நிலையத்திற்கு வெளியே நிற்கும் ஆளில்லா தர்பூசணி வண்டியில் இருந்து ஒரு பழத்தை திருடி செல்லும் காட்சி.
சேரனும் அவரது உதவியாளரும் SCORPIO வாகனத்தில், குற்றவாளிகளின் வாகனத்தை துரத்தி நிலமட்டத்துக்குக் கீழ் உள்ள வாகன நிறுத்ததிற்குள் செல்லும் காட்சி.
இறுதி காட்சியில் லக்ஷ்மியின் நடிப்பு.
டிஸ்கி1:
திரைப்படத்தின் பிண்ணனி இசை என்னை கவர்ந்திருந்தது. இயக்குநர் மிஷ்கினின் எல்லா திரைப்படங்களிலும் ஒரு கானா பாடல் இருக்கும் (நந்தலாலா மட்டும் இதற்கு விதி விலக்கு). அந்த வகையில் இந்த திரைப்படத்தில் வரும் "கன்னி தீவு பொண்ணா..." பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த பாடலுக்கு மட்டும் இயக்குநர் "அமீர்" வந்து ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார்.
டிஸ்கி2:
லக்ஷ்மியின் கதாபாத்திரத்தை செய்ய நடிகை நதியாவை தான் முதலில் அணுகி இருக்கிறார்கள். ஆனால், அவர் மறுக்கவே வாய்ப்பு லக்ஷ்மிக்கு வந்திருக்கிறது.
0 மறுமொழிகள்:
Post a Comment