தில் சாஹ்தா ஹே... (Dil Chahta Hai)


நண்பர்களை பற்றியும் நட்பை பற்றியும் பல திரைப்படங்கள் வந்திருந்தாலும், எனக்கு முதல் முதலில் நியாபகத்துக்கு வருவது இந்த திரைப்படம் தான். அந்த அளவுக்கு என்னை வசீகரித்த திரைப்படம் இது. எனது நெருங்கிய நண்பர்களை பற்றிய சிந்தனைகள் அதிகமாக  வரும்போதெல்லாம் இந்த திரைப்படத்தை பார்த்துவிடுவேன். ஏனென்றால் இந்த திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் எனது நண்பர்களை நியாபகப்படுத்தும். நம் அனைவருக்கும் வாழ்க்கையின் ஒவ்வொரு கால கட்டங்களிலும் நெருங்கிய நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் சில அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டும் அந்த நண்பர்கள் வாழ்க்கையின் எல்லா கால கட்டங்களிலும் உடன் வருவார்கள். அப்படிப்பட்ட நட்பை பற்றிய மற்றும் நண்பர்களை பற்றிய திரைப்படம் தான் இது. நட்பை போற்றும் அனைவருக்கும் இந்த திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்.


இந்த திரைப்படம் வித்தியாசமான குணங்களை கொண்ட மூன்று நண்பர்களையும் அவர்களது வாழ்க்கையில் தோன்றிய காதலையும் பற்றியது.  படத்தின் இயக்குநர் ஃபர்ஹான் அக்தர் (Farhan Akhtar) வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது. ஒரு மருத்துவமனையில் இருந்து திரைப்படம் தொடங்குகிறது. அங்கே வெகுநாட்களுக்கு பிறகு சந்திக்கும் இரண்டு நண்பர்கள் சித்தார்த் (Akshaye Khanna) மற்றும் சமீர் (Saif Ali Khan) அவர்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பற்றி சிலாகித்து பேசிக்கொள்வது தான் முழு திரைப்படமும்.


சமீர், தான் பார்க்கின்ற அழகான பெண்கள் மீதெல்லாம் காதல் வயப்படும் ஒரு கதாபாத்திரம். அப்படி தான் ஒரு முறை நண்பர்கள் மூவரும் கோவா செல்லும் போது, அங்கே ஒரு ஆங்கில பெண்ணிற்கு ரூட் விட்டு, அந்த பெண்ணுடன் சுற்றி காதல், கல்யாணம், வெளிநாட்டில் நிலையான வாழ்க்கை என்று கனவு காண, இறுதியில் அந்த பெண் சமீரிடம் உள்ள அனைத்தையும் திருடிவிட்டு அவனை அம்பேலாக்கி விட்டு ஓடிவிடுகிறாள். அவனுக்கும் ஒரு காதலி இருக்கிறாள். ஆனால் அவள் எப்போதும் சமீரை அடக்கி ஆள்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறாள்.


ஆகாஷ் (Ameer Khan) காதல் மீது நம்பிக்கை இல்லாத ஆசாமி. அதனால், இரண்டு வாரங்களுக்கு மேல் எந்த ஒரு பெண்ணிடமும் நட்பாக பழகுவதில்லை. மேலும் மற்றவங்களை கிண்டலடிப்பது தான் எந்நேரமும் பொழுதுபோக்காக கொண்டிருப்பான். ஒரு நாள்  இவர்களின் கல்லூரி நாட்கள் முடிவின் போது நடக்கும் ஒரு விருந்து நிகழ்ச்சியில், ஆகாஷ் வழக்கம் போல கிண்டலுக்காக அங்கே வேறொருவருக்கு நிச்சயிக்க பட்ட ஷாலினி (Preity Zinta) என்ற  பெண்ணிடம் காதலை சொல்லி அடிவாங்குகிறான்.  அதே போல், ஒரு முறை சமீரை அவனின் காதலியிடம் மாட்டிவிட்டு அவர்களின் காதலின் பிரிவிற்கும் காரணமாகின்றான்.


கடைசியாக சித்தார்த், வாழ்க்கையை பற்றிய புரிதல் உள்ளவன், அர்த்தமில்லாத அற்பமாக தோன்றும் காதல் மீது நம்பிக்கை இல்லாதவன். கோவா பயணத்தின் போது, ஆகாஷ் பின்னால் காதலுடன் வளைய வளைய சுற்றும் பெண்ணிற்கு கொடுக்கும் அறிவுரை யதார்த்தமானது மட்டுமல்ல, மறுக்க முடியாத உண்மையும் கூட. அந்த ஒரு காட்சி சித்தார்த்தின் கதாபாத்திரத்தை சொல்லிவிடும். படங்கள் வரைவது தான் இவனது பொழுதுபோக்கு. இப்படி வெவ்வேறான குண நலங்கள் கொண்ட மனிதர்கள் நண்பர்கள் என்றால் எப்படி இருக்கும்? இவர்கள் வாழ்க்கையில் உண்மையான காதல் வந்தால் எப்படி இருக்கும்? அதை தான் இந்த திரைப்படம் தத்ரூபமாக சொல்கிறது.


 சமீர், வீட்டில் நிச்சயம் செய்கின்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறான். இத்தனைக்கும் அந்த பெண்ணை இன்னொருவன் ஏற்கனவே காதலித்து கொண்டிருக்கிறான். அந்த பெண்ணும் அரை குறையாக அவனை காதலித்து கொண்டிருக்கிறாள். ஆகாஷ், தான் முதலில் விளையாட்டாக காதலை சொல்லி அடிவாங்கிய பெண்ணிடமே காதல் வயப்படுகிறான். சித்தார்த், தன்னை விட வயதில் மூத்த, ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான பெண்ணின் மீது காதல் வயப்படுகிறான். இப்படி வித்தியாசமான பெண்களிடம் இவர்கள் தங்களது உண்மையான காதலை உணர்கிறார்கள். இவர்களது காதல் ஒன்று கூடியதா? மற்றும் அவர்களின் நட்பில் வரும் பிரிவு, சோகம், தனிமை, சந்தோசம் அனைத்தையும் திரைப்படத்தில் கண்டுகளியுங்கள்.


இந்த திரைப்படத்தில் வருகின்ற வசனங்கள் யதார்த்தமாகவும் அருமையாகவும் இருக்கும்.  இந்த திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் எனக்கும் பிடிக்கும். தனிமையின் வலியை சொல்லும் பாடலாகட்டும், நட்பின் இனிமையை சொல்லும் பாடலாகட்டும், காதலின் துள்ளலை சொல்லும் பாடலாகட்டும் மிகவும் அருமை. இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவு மற்றொரு குறிப்பிட வேண்டிய விஷயம்.

டிஸ்கி1:
இந்த திரைப்படத்தில் இருந்து இரண்டு காட்சிகளை தமிழ் திரைப்படங்களில் திருடி இருக்கிறார்கள். அவை "உன்னாலே... உன்னாலே..." மற்றும் "பாஸ் (என்கிற) பாஸ்கரன்" திரைப்படங்கள்.

டிஸ்கி2:
இந்த திரைப்படம் 2௦௦2 வருடதிற்கான தேசிய விருதை பெற்றது.

SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment