கோ


K.V.ஆனந்த் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் கோ. இந்த படம் வெளிவருவதற்கு முன்பே படத்தின் கதையை யூகித்திருந்தேன். நான் யூகித்திருந்த கதையானாலும் அதை சொல்லி இருந்த விதத்தில் கொஞ்சம் வித்தியாசம் இருந்ததால், என்னால் இறுதிவரை ரசிக்க முடிந்தது. இவரது இயக்கத்தில் வெளிவந்த கனா கண்டேன் மற்றும் அயன் திரைப்படங்கள் கந்துவட்டி, கள்ளக் கடத்தல் போன்றவற்றை பற்றி பேசியுள்ளன. அதுபோல, இந்த திரைப்படம் அரசியலை பற்றியும் அதில் பத்திரிக்கைகளின் பங்களிப்பை பற்றியும் பேசுகிறது.


தேர்தலுக்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டிய திரைப்படம், ஆனால், ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை ஏற்கனவே வாங்கி தேர்தலுக்கு பின் வெளியிட்டது சாமர்த்தியம். ஆளுங்கட்சியையும் எதிர்கட்சியையும் தோற்கடித்து இளைஞர்களை உறுப்பினர்களாக கொண்ட அஜ்மல் தலைமையிலான சிறகுகள் என்ற கட்சி ஆட்சியை பிடிப்பதும், இதற்கு ஜீவா பணி புரியும் பத்திரிக்கையின் பங்களிப்பை பற்றியும் பேசுவது தான் முழு திரைப்படமும். 


சிம்புவின் கையில் இருந்து மாறி ஜீவாவின் கைக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக்கொண்டார். பத்திரிக்கையில் பணிபுரியும் ஒரு உண்மையான புகைப்படகலைஞருக்கான இயல்புகளுடன் வந்து போகிறார். ஆரம்பா காட்சியில் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டே புகைப்படம் எடுக்கும் காட்சி அருமை. ராதாவின் மகளான கார்த்திகாவின் கண்கள் கவிதைகள் சொல்கின்றன. ஆனால், நடிப்பதற்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் அமையவில்லை. பியாவிற்கு மிக இயல்பான நகரத்தில் வாழும் பெண்ணாக வரும் கதாபாத்திரம், அதை மிக அருமையாக செய்திருக்கிறார். அடுத்ததாக அஜ்மல், அஞ்சாதே திரைப்படத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும்படியான திரைப்படம், திரைக்கதையும் இவரை சுற்றியே நகர்கிறது.


ஆளுங்கட்சி முதல்வராக வரும் பிரகாஷ்ராஜ் நடிக்க காட்சிகள் அதிகம் இல்லை. கொடுத்த வாய்ப்பினை மட்டும் பயன்படுத்தி கொண்டார். தேர்தலையொட்டி எதிர்கட்சி தலைவரான கோட்டா சீனிவாசராவின் பிரச்சாரங்களும், அதன் போது ஜீவா எடுக்கும் புகைப்படங்கள் இயக்குனரின் நகைச்சுவை உணர்வை மட்டும் அல்ல, தற்போதைய தமிழ் நாட்டின் அவல நிலையையும் காட்டுகிறது. இந்த திரைப்படத்தை நண்பர்களோடு சென்று பார்க்கலாம்.


திரைப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது ரிச்சர்ட் M. நாதனின் ஒளிப்பதிவு மற்றும் சுபாவின் வசனங்கள். படத்தின் பாடல்கள், என்னமோ ஏதோ என்ற பாடலின் மூலம் ஏற்கனவே பெரும்பான்மையான மக்களை சென்றடைந்து விட்டது. அயன் திரைப்படத்தில் எப்படி நெஞ்சே நெஞ்சே பாடல் தேவை இல்லாத சூழ்நிலையில் புகுத்தி வீணடிக்கபட்டதோ, அதே போல இந்த திரைப்படத்தில் வெண் பனியே பாடல் வீணடிக்க பட்டிருந்தது. மற்றபடி, அமளி துமிலி பாடல் படமாக்கபட்ட இடங்கள் மிக அருமை. அழகான இடங்களை தேடி தேடி படமாக்கிருக்கிறார்கள். அக நக பாடலுக்கு சூர்யா, பரத், தமண்னா, மிர்சி சிவா என ஒரு நட்சத்திர பட்டாளமே தோன்றியது K.V.ஆனந்த் மீது இவர்களுக்குள்ள மதிப்பை காட்டுகிறது. மற்றபடி, எப்போதும் எனக்கு பிடித்த பாடல் என்றால் என்னமோ ஏதோ பாடல் தான். பாடல் வரிகள் அந்த அளவிற்கு என் மனதை கொள்ளை கொண்டது தான் இதற்கு காரணம். 


டிஸ்கி1:
இந்த திரைப்படத்தை அம்பாசமுத்திரம் கல்யாணி திரை அரங்கில் பார்த்தேன். கடைசியாக பீமா திரைப்படத்தை இங்கே பார்த்த நியாபகம். கொஞ்சம் சுத்தமாக தான் இருந்தது, அப்போது இருந்த நிலைக்கு இப்போ எவ்வளவோ பரவா இல்லை.

டிஸ்கி2:
திரைப்படத்தின் இடைவெளியில் ஜீவா நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் ரௌதிரம் மற்றும் தெலுங்கில் வெளிவந்து சிறப்பாக ஓடிய மஹதீரா திரைப்படத்தின் தமிழ் பதிப்பான மாவீரன் திரைப்படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்டது.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment