1940ஆம் ஆண்டு சார்லி சாப்ளின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இது. சார்லி சாப்ளின் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது அவருடைய நகைச்சுவையான உடல் அசைவுகளும், காணும் அனைவரையும் சிரிக்க வைக்கும் நடிப்பு திறமையும் தான். திரைப்படங்களில் சாப்ளின்
நாம் அனைவரையும் சிரிக்க வைத்தாலும் அவரது இயல்பான வாழ்க்கை மிகவும் துன்பியலானது. அதை தான் சாப்ளின் ஒரு முறை "மழையில் நனைவது எனக்கு மிகவும் பிடிக்கும்... ஏனென்றால், அப்போதுதான் நான் அழுவது வெளியில் தெரியாது...!!" என்று கூறி இருந்தார். அவரை பற்றி ஒரு தனி பதிவே எழுதலாம். அந்த அளவிற்கு நாம் கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் அடங்கியது அவரது வாழ்க்கை வரலாறு. நாம் படத்திற்கு வருவோம்....
நான் கல்லூரி படிக்கும் போது தமிழில் வெளிவந்த "தில்" திரைப்படத்தில், ஒரு பாடலில் "ஹிட்லர் காலத்தில்... அந்த சார்லி சாப்ளின் தில்..." என்று ஒரு வரி வரும். அந்த வரிகளை கேட்கும் போதெல்லாம், ஹிட்லர் போல சாப்ளினும் அவரது காலகட்டத்தில் மீசை வைத்ததை தான் அப்படி எழுதி இருக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன் இந்த திரைப்படத்தை பார்க்கும் வரையில். ஆனால் உண்மை என்னவென்றால், இந்த திரைப்படம் முழுக்க ஹிட்லரை கிண்டல் செய்தும் அவரது கொள்கைகளை எதிர்த்தும் எடுக்கப்பட்டிருந்தது. இது போக, இந்த திரைப்படம் வெளிவந்த நேரம் இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் உலகையே உலுக்கி கொண்டிருந்த வேளை.
திரைப்படத்தின் ஆரம்பத்தில், முதலாம் உலகப்போரில் டொமேனியா (கற்பனைக்கு) நாட்டிற்கு ஆதரவாக பங்கேற்க்கும் யூதராக வருகிறார் சாப்ளின். நான் யுத்த காட்சிகளில் மனம் விட்டு சிரித்து பார்த்த திரைப்படம் இது ஒன்றாக தான் இருக்கும். படத்தின் ஆரம்பத்திலேயே நகைச்சுவையில் கலக்கியிருப்பார் சாப்ளின். போரின் இறுதியில் அவரது நாடு தோற்றுவிடுகிறது. அது போக சாப்ளின் தனது சுய நினைவை யுத்தத்தில் நிகழும் விமான விபத்தில் இழந்து விடுகிறார். அதன் பின்னர் டொமேனியா நாடு ஹின்கலின் காட்டுபாட்டிற்குள் வருகிறது. ஹின்கலாகவும் சாப்ளினே நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் இரட்டை வேடம் சாப்ளினுக்கு. ஹின்கல் ஒரு சர்வாதிகாரி (ஜெர்மனை ஆண்ட ஹிட்லர்).
இருபது வருட மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் தனது முடி வெட்டும் தொழிலை தொடர சொந்த ஊருக்கு வருகிறார். அவரது பழைய கால நினைவுகள் யாவும் அழிக்கப்பட்டதால், ஹின்கல் தற்போது தனது நாட்டை ஆட்சி செய்வது கூட அவருக்கு தெரியாது. சாப்ளின் ஒரு யூதர் என்பதால் அவரது முடிவெட்டும் கடையில் "யூதர்" என்று எழுதி வைத்துவிட்டு சென்றுவிடுகிறது ஹின்கலின் அதிரடிப்படை. தனது கடையை திறக்க தடுக்கும் வீரர்களை அப்போது அங்கே வரும் ஹென்னா என்னும் பெண்ணின் உதவியுடன் அடித்து விரட்டி விடுகின்றனர். அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே காதல் வருகிறது.
இதே நேரத்தில் ஹின்கலின் அட்டகாசங்கள் அதிகமாகிறது. இதனை மிகவும் நகைச்சுவையாக அவரது உடல் அசைவுகளிலும் வசன உச்சரிப்புகளிலும் காட்டியிருப்பார் சாப்ளின். அது போக, பாக்டீரியா நாட்டின் தலைவன் நெபோலினி (இரண்டாம் உலகப்போரில் இத்தாலி நாட்டின் சர்வாதிகாரி முசொலினியை பெயர் மாற்றி இருக்கிறார்கள்) மற்றும் ஹின்கல் சந்திக்கும் காட்சிகள் நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருந்தது.
ஹின்கலின் அதிரடிப்படையை தற்கொலை படை தாக்குதல் மூலம் வீழ்த்த சாப்ளின், ஹென்னா மற்றும் அவரது உறவினர்கள் முடிவெடுக்கின்றனர். அதற்காக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பதை, ஒரு நாணயத்தை அவர்களுக்கு பரிமாரும் உணவில் வைத்து கொடுக்கிறார்கள். அந்த நாணயம் யாருடைய சாப்பாட்டில் வருகிறதோ அவர்கள் தான் அந்த தற்கொலை படையை வழி நடத்த வேண்டும் என்பதை அதன் மூலம் முடிவு செய்கிறார்கள். இந்த காட்சியையும் மிக நகைச்சுவையுடன் எடுத்திருப்பார்கள்.
இறுதியில், ஹின்கலின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு என்ன என்பதை திரைப்படத்தில் கண்டு சிரித்து மகிழுங்கள்.
டிஸ்கி1:
சார்லி சாப்ளின் எடுத்த முதல் பேசும் திரைப்படம் இது தான்.
இந்த திரைப்படத்தை தானே இயக்கி, தயாரித்திருந்தார் சாப்ளின்.
டிஸ்கி2:
இந்த திரைப்படத்தை ஹிட்லர் இரண்டு முறை தொடர்ந்து தனியாக பார்த்தார் என்பதாக வரலாறு கூறுகின்றது.
டிஸ்கி3:
சார்லி சாப்ளின் வரலாற்றை தமிழில் படிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
சார்லி சாப்ளினின் வாழ்க்கை வரலாறு
nice..........
ReplyDelete