யுத்தங்களை மையப்படுத்தி பல திரைப்படங்கள் வந்துள்ளன. அந்த மாதிரியான திரைப்படங்களில் உள்ள பிரம்மாண்டத்தை நான் பல திரைப்படங்களில் ரசித்துள்ளேன். ஆனால், அத்தகைய யுத்தங்களில் நடக்கின்ற கொடூரமான உயிர் இழப்புகளை உணர்த்தியது இந்த Saving Private Ryan திரைப்படம். பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்தை இயக்கி இருந்தாலும், இந்த திரைப்படத்தில் பிரம்மாண்டம் இருப்பதாக நான் உணரவில்லை. ஆனால், போரின் போது ராணுவ வீரர்களின் செயல்பாடுகள், அத்தகைய இறுக்கமான சூழ்நிலையிலும் அவர்கள் தனது மூத்த அதிகாரிகளின் ஆணைகளுக்கு கட்டுபட்டு நடப்பது மற்றும் அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளை தான் எனக்கு முன்னிறுத்தி காட்டியது.
இந்த திரைப்படம் இரண்டாம் உலகப்போரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் என்றதும் எனக்கு நினைவிற்கு வருவது ஹிட்லரும், எனக்கு 10ஆம் வகுப்பில் வரலாறு பாடம் சொல்லி கொடுத்த நடராஜன் ஆசிரியரும் தான். அவர் சொல்லிகொடுத்த விதமோ என்னவோ, எனக்கு ஹிட்லரை அந்த அளவிற்கு பிடித்து போனது. அது போகட்டும், நாம் படத்திற்கு வருவோம்...
போரில் இறந்தவர்களின் கல்லறைக்கு வரும் ஒரு வயதான தாத்தா நினைத்து பார்க்கும் பழைய கால நினைவுகள் தான் முழு திரைப்படமும். 1944ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. நேசப்படைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஹிட்லரின் ஜெர்மன் படைகளை எதிர்த்து போரிட்டு கொண்டிருந்த நேரம் அது. பிரான்ஸ் நாட்டின் வடக்கு மாகாணம் அப்போது ஜெர்மன் படைகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. அவர்களை அங்கிருந்து வெளியேற்ற நேசப்படைகள் இங்கிலீஷ் கால்வாயை ஒட்டிய ஒரு கடற்கரையின் வழியாக பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்கின்றது. அப்போது அங்கே ஜெர்மன் படைக்கும் நேசப்படைக்கும் கடுமையான யுத்தம் நடக்கிறது. அதில் பல உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது. அந்த நேச படைகளில் கேப்டன் ஜான் H. மில்லரும் (Tom Hanks) ஒருவர். அங்கே ஒரு வழியாக ஜெர்மன் படைகளை சமாளித்து முன்னேறுகிறது நேசப்படை.
அதன் பின்னர் மில்லரின் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு ஜேம்ஸ் பிரான்சிஸ் ரையான் என்னும் போர் வீரனை மட்டும் தேடி செல்கிறது. காரணம், அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பத்தில் இருந்து நான்கு சகோதரர்களும் இந்த போரில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் யுத்தத்தில் இறந்து விடுகின்றனர். அதனால், அந்த குடும்பத்தில் மீதம் இருக்கும் அந்த கடைசி நபரை எப்படியாவது போரில் உயிர் இழக்காமல் பாதுகாத்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக அமெரிக்க அரசாங்கம் கொடுத்த ஆணையின் பேரில் தான் இந்த குழு செல்கிறது. ஒரே ஒரு உயிரை பாதுகாக்க எட்டு பேர் கொண்ட குழு உயிரை பணயம் வைத்து செயல்படுவது தான் மீதி கதை. மேலும், இந்த பணியை மட்டும் சரியாக செய்து முடித்துவிட்டால், இவர்கள் அனைவருக்கும் இந்த போரில் இருந்து விலகி வீட்டிற்கு செல்லும் உத்தரவும் இடப்படுகிறது.
ரையானை கண்டுபிடிக்க அவர்கள் படும் துன்பங்கள், உயிர் இழப்புகள், மனப்போராட்டங்கள் என அனைத்தையும் காட்டி இருப்பார் ஸ்பீல்பெர்க். இறுதியில் அவர்கள் ரையானை எப்படி கண்டுபிடித்தார்கள் மேலும் உயிரோடு வந்து சேர்ந்தார்களா என்பதை திரைப்படத்தில் கண்டுகளியுங்கள்.
டிஸ்கி:
யுத்தங்களை பற்றிய படங்களின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த திரைப்படம் கண்டிப்பாக பிடிக்கும். இந்த திரைப்படம் ஐந்து ஆஸ்கர் விருதுகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்தில் Tom Hanksன் நடிப்பு அருமையாக இருந்தது.
0 மறுமொழிகள்:
Post a Comment