கடந்த பாகத்தை தவற விட்டவர்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...
பாகம் 6
திடீர் மழை கொடுத்த சந்தோசத்தில் நனைந்திருந்த ரகு, இன்னும் கொஞ்ச நேரம் மழை நீடிக்க வேண்டும் மனதிற்குள் வேண்ட, மழையை நிறுத்தி அவனது வேண்டுதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் வருண பகவான். அதன் பின் மூன்று பேரும் பணிக்கு திரும்பினார்கள். இரண்டு வாரங்கள் ஓடியது, பின்னொரு நாள் சீதாவின் இருக்கைக்கு வந்த ரகு, தன்னுடன் அலுவலகத்திற்கு வெளியே வருமாறு கேட்டான். கெழுத்தி மீன்களை கொண்ட கண்கள் அவள் அணிந்திருந்த கண்ணாடியின் கடைவாசல் வழியே சிமிட்டி கொண்டு தாவி குதிக்க, "என்ன விஷயம்?" என்று வினவினாள். "ஐந்து நிமிடம் வெளியே வந்தால் தெரிந்துவிட போகிறது" என்றான் ரகு. "சரி வாங்க போகலாம்" என்றவாறு ராகுவுடன் கிளம்பினாள். ரகு தான் வாங்கியிருந்த புதிய யமஹா வாகனத்தை அவளிடம் காட்டினான். அவளும் அதனை பார்த்துவிட்டு ரகுவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தாள். பின்னர் அதன் விலை முதலிய தகவல்களை ரகுவிடம் கேட்டு தெரிந்து கொண்டாள். மேலும் தனக்கு இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்வது பிடிக்காது என்றும், நான் இது வரை எனது வாழ்க்கையில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்தது கிடையாது என்றும் கூறினாள். இதனை கேட்ட ரகு ஆச்சரியமடைந்தான். பொதுவாக பெண்கள் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதை மிகவும் விரும்புவார்கள் என்று தான் அன்று வரை நினைத்திருந்தான் ரகு. அந்த நினைப்பில் மட்டுமல்லாது, சீதாவை தனது வாகனத்தில் அழைத்து செல்லலாம் என்ற பேராசையிலும் மண் அள்ளி போட்டாள்.
அன்று முழுவதும், இந்த அளவிற்கு அவள் இரண்டு சக்கர வாகனத்தை வெறுக்க காரணம் என்னவாக இருக்கும் என்று தனக்குள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான் ரகு. அடுத்த நாள் அலுவலகத்திற்கு சரண்யா வரவில்லை. சீதா அலுவலகத்திற்கு கொஞ்சம் தாமதமாக வந்தாள். அன்றைய பொழுது காஃபி குடிக்க செல்லும் போது இதனை கேட்கலாமா என்று யோசித்து யோசித்து இறுதியில் கேட்காமலேயே விட்டுவிட்டான். இவ்வளவு குறைந்த இடைவெளியில் அதிகம் பழக்கம் இல்லாத ஒரு பெண்ணிடம் இதை பற்றி விசாரிப்பது சரிதானா என்று அவனது மனம் அவனுக்குள் கேட்ட கேள்விகள் தான் இந்த வேகத்தடைக்கு காரணம். ஒரு வாரம் கழிந்தது, அன்றைய பொழுது சீதா அலுவலகத்தில் இருந்து கிளம்பும் வரை ரகு காத்திருக்க, சரண்யாவோ ரகு கிளம்பும் வரை காத்திருந்தாள். சீதா அன்றைய பணிகளை முடித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து கிளம்ப தயாராகினாள். உடனே ரகு சுதாரித்து கொண்டு நான் இன்றைக்கு JP நகருக்கு ஒரு வேலை விஷயமாக செல்லவேண்டியுள்ளது என ஒரு பொய்யுடன் தொடங்கினான் பேச்சு வார்த்தையை. "சரி நல்லது, எப்படி செல்கிறீர்கள்..? உங்களது வாகனத்தில்தானே?" என்று ரகுவிடம் கேட்டாள் சீதா. "ஆமாம் அதில் தான் செல்கிறேன், அதனால் தான் உங்களையும் அழைத்து செல்லலாம் என காத்துக்கொண்டிருக்கிறேன்" என்றான் ரகு. வழக்கமாக புன்னகை தவழும் சீதாவின் முகத்தில் கோபம் தாண்டவமாடுவதை உணர்ந்தான் ரகு. "நான் தான் அன்றே சொன்னேன் அல்லவா...? எனக்கு இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்வது பிடிக்காது என்று" என கோபத்தில் அனல் வார்த்தைகளை வீசினாள் சீதா. "நான் எனது வாகனத்தில் இது வரை யாரையும் ஏற்றி சென்றது கிடையாது. முதல் முதலாக உங்களிடம் கேட்டேன், ஆனால் நீங்கள் மறுக்கிறீர்களே..?" என்று உணர்ச்சி வசப்பட்டான் ரகு. "கண்டிப்பாக அதற்கென்று ஒருவர் பிறந்திருப்பார்கள்" என்றாள் சீதா. "ஏன் அந்த ஒருவர் நீங்களாக இருக்க கூடாது...?" என்றான் ரகு. "அது எப்படி அதிகம் பழக்கம் இல்லாத ஒரு பெண்ணிடம் இந்த மாதிரி உங்களால் கேட்க முடிகிறது? நான் தான் சொன்னேன் அல்லவா? ஏன் மறுபடியும் அதை நியாபகப்படுத்தும் விதமாக கேட்கிறீர்கள்" என்று உருமிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் சீதா. சீதாவை தான் முதல் முதலாக தனது வாகனத்தில் அழைத்து செல்லவேண்டும் என்ற ரகுவின் எண்ணம் புஸ்வானமாக மாறியது. இனி எப்படி அவளிடம் பேசுவது? அவள் தன்னுடன் பேசுவாளா? என பல கேள்விகள் அவனது மூளையை குடைந்தது. நான் உன்னை காதலிப்பதால் தான் இந்த மாதிரி உன்னிடம் வெளிப்படையாக கேட்டுவிட்டேன் என்று கூற ரகுவால் முடியவில்லை.
அடுத்த நாள், அலுவலகத்தில் ரகு யாருடனும் பேசவில்லை. இப்போது சீதா இருக்கும் மன நிலைமையில் அவளிடம் பேசவேண்டாம், கொஞ்சம் இடைவெளி விட்டு பேசலாம் என்று முடிவு செய்திருந்தான் ரகு. தனக்குள் மட்டுமே எடுக்கும் முடிவுகள் காதலுக்கு ஒத்துவராது என்பது ரகுவிற்கு தெரியாது போல. சீதாவும், சரண்யாவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ரகு சரியாக பேசாததால் சீதாவும், சரண்யாவும் மட்டும் காஃபி குடிக்க சென்றனர். இது ரகுவின் மனதை மேலும் பாதித்தது. தான் ஆளில்லா தீவில் தனியே தத்தளிப்பது போன்று உணர்ந்தான் ரகு.
(பின் தொடருங்கள்...)
டிஸ்கி:
சென்ற வாரமே இந்த பாகத்தை எழுத ஆரம்பித்துவிட்டேன். எனது பெரியம்மா மற்றும் நண்பர் ஒருவரின் தந்தை சென்ற வார தொடக்கத்தில் இயற்கை எய்தியதால் தொடர்ந்து எழுத முடியாமல் போனது.
இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே.
இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே.
0 மறுமொழிகள்:
Post a Comment