சீதா லக்ஷ்மி - பாகம் 5

கடந்த வாரத்தை தவற விட்டவர்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...


பாகம் 5

சனி கிழமையும் கழிந்தது, ஞாயிற்று கிழமையும் கழிந்து திங்கள் கிழமையும் வந்தது. ஆனால், சீதா மட்டும் அலுவலகத்திற்கு வரவில்லை. என்ன நடந்திருக்கும் என்று முழு திங்களையும் அலுவலகத்தில் தனிமையில் கழித்து அம்மாவாசை ஆகி போனது ரகுவின் மனம். அவனால் சீதாவை தொடர்பு கொண்டு கேட்கவும் முடியவில்லை. அவளை நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை. காதலை அவளிடம் முன்பே சொல்லியிருந்தால் ஒரு முடிவு தெரிந்திருக்கும், அதற்கும் இப்போது வழியில்லாமல் போனது என்று மனதிற்குள் நினைத்து புழுங்கினான் ரகு. அடுத்த நாள், அலுவலகத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தவன் சீதாவின் இருக்கையில் யாரோ இருப்பதை கவனித்தான், அருகில் வந்ததும் ஆச்சரியத்தில் அவனது மனம் விரிந்தது. சீதா நேற்று முடிக்கவேண்டிய பணிகள் கிடப்பில் கிடந்ததால் அதனை முடிப்பதில் கொஞ்சம் மும்மூரமாக இருந்தாள். அவளிடம் எப்போது பேசலாம் என்று ஒவ்வொரு நிமிடத்தையும் நகர்த்தி கொண்டிருந்தான் ரகு.

சில மணி நேரங்களுக்கு பிறகு, "வெளியே உள்ள கடையில் காஃபி அருந்த செல்லலாமா ரகு..?" என்று கேட்டாள் சீதா. இதை சற்றும் எதிர்பார்க்காத ரகு, சில வினாடிகளுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பினான். "சரி செல்லலாம்" என்று அவளுடன் நடையை கட்டினான். காஃபி கோப்பையுடன் இருவரும் சில நிமிடங்கள் பேசாமல் எதிர் எதிரே நின்று கொண்டிருந்தனர். அவளே உரையாடலை ஆரம்பிக்கட்டும் என்று காத்துக்கொண்டிருந்தான் ரகு. அவனது எதிர்பார்ப்பும் நிறைவேறியது. "திரைப்படம் எப்படி இருந்தது ரகு..?" என்று கேட்டாள் சீதா. "எந்த திரைப்படம் சீதா..?" என்று பதிலுக்கு கேட்டான் ரகு. "அதான், நீங்களும் நானும் போகலாம் என்று நினைத்திருந்தோமே..? அந்த திரைப்படம் தான்" என்றாள். "நான் அன்று திரைப்படத்திற்கு செல்லவில்லை, தலைவலி கொஞ்சம் அதிகமாக இருந்ததால் நன்றாக தூங்கி ஓய்வெடுத்து கொண்டேன்" என்றான் ரகு. "சரி, உங்கள் கல்யாண விஷயம் என்னவாயிற்று..?" என்று மெல்ல கேட்டான் ரகு. "ஓ அதுவா? சொல்கிறேன்" என்று ஆரம்பித்தாள். "என்னை பெண் பார்க்க வரும் விஷயம் எனக்கு உண்மையில் தெரியாது. ஏதோ அவசர அவசரமாக வீட்டிற்கு வர சொல்லியிருந்தார்கள். அங்கு சென்ற பின் தான் எனக்கு விஷயமே தெரிந்தது. சரி நானும் ஒரு சாம்பரதாயத்திற்கு ஒத்துக்கொண்டேன். என்னை பெண் பார்க்க வந்தவரிடம் பேசிய போது தான் தெரிந்தது, அவரும் என்னை போல பெற்றோரின் கட்டயத்தில் வந்தது. இது போக, அவருக்கு ஏற்கனவே காதலி இருப்பதும் தெரிந்தது. அவர் இந்த உண்மையை எனது பெற்றோரிடம் செல்லும் போது சொல்லிவிட்டதால், எனது பெற்றோர் இந்த சம்பந்தததை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டார்கள். இந்த காலகட்டத்தில் கிராமங்களில் இதெல்லாம் சாதாரண விஷயமாகிவிட்டது" என்று நடந்த விஷயத்தை சொல்லி முடித்தாள். மூன்று நாட்களுக்கு முன் காற்றில் கலந்துவிட்ட அவனது ஆவி மீண்டும் உடம்பிற்குள் ஒட்டிக்கொண்டது போல உணர்ந்தான் ரகு. காஃபியை முடித்து கொண்டு அங்கிருந்து அலுவலகத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தார்கள். அன்று கொஞ்சம் சூரியன் சுட்டெரித்து கொண்டிருந்தது., அந்த சூரிய ஒளியில் அவர்கள் இருவரின் நிழல்கள் சரசமாடிக் கொண்டிருந்ததை ரகு கவனித்தான்.

" காதலை இன்று சொல்லலாம்,
நாளை சொல்லலாம் என்று
தவிக்கும் நாட்களில் - இருவர் உடலும்
பட்டு விடக்கூடாது என்று
விலகி விலகி நடப்போம் - ஆனால்
கொஞ்சம் கூட வெட்கமில்லாமல்
உரசிக்கொண்டு வரும் நம் நிழல்கள்...."

என்று நிழலை பார்த்து மனத்திற்குள் வினவினான் ரகு.


இரண்டு வாரங்கள் கழிந்தன, அவர்களுடைய அலுவலகத்தில் சரண்யா என்ற மற்றொரு தமிழ் பெண் புதிதாக சேர்ந்தாள். சரண்யா, சீதாவை விட உண்மையில் கொஞ்சம் அழகு தான். சரண்யா வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ரகுவிடம் தானாக வந்து பேச ஆரம்பித்துவிட்டாள். ரகுவும் அவளுக்கு பணி சம்பந்தமான விஷயங்களில் உதவினான். இதையெல்லாம் சீதா கவனித்து கொண்டிருந்தாள். சரண்யா வந்து இரண்டு நாட்கள் கழிந்து மூன்றாவது நாள் அது. மதிய உணவு கொடுத்த மயக்கத்தில் அலுவலகமே அரைத்தூக்கத்தில் பணியில் ஈடு பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் "காஃபி போவோமா..?" என்று கேட்டாள் சீதா. "சரி போகலாம்" என்றான் ரகு. சரண்யாவும் எழுந்து, "நானும் உங்களுடன் வருகிறேன்" என்று இணைந்து கொண்டாள். சீதாவின் கண்கள் அனல் கக்குவதை ரகு மட்டும் கவனித்தான். மூன்று பேரும் காஃபி கோப்பையுடன் நிற்கவும், மழை உதிர ஆரம்பிக்கவும் நேரம் சரியாக இருந்தது. திடீர் மழையை சீதாவும், சரண்யாவும் ரசிக்க ஆரம்பித்தனர். ரகு மட்டும், சீதா மழையை ரசிக்கும் அழகை ரசித்து கொண்டிருந்தான்.
(பின் தொடருங்கள்...)

டிஸ்கி:
இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment