Kung Fu Panda - 2 [3D]


நேற்றே நண்பன் பிரமோத் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு முன் பதிவு செய்திருந்தான். பொதுவாக இரவு காட்சிகள் என்றால் திரை அரங்கத்தில் பெரும்பாலும் தூங்கி விடுவேன். அப்படி நான் முழு திரைப்படத்தையும் விழித்திருந்து பார்த்தவை மிக குறைவே, அந்த வரிசையில் இந்த திரைப்படமும் அடங்கும். அனிமேஷன் திரைப்படங்கள் என்றாலே குழந்தைகள் தான் விரும்பி பார்ப்பார்கள் என்று என் தோழி கிருஷ்ணா படம் ஆரம்பிக்கும் முன்பே கைப்பேசியில் பேசும் போது சொன்னாள். அதனால், படம் எப்படி இருக்குமோ என்ற ஒரு எண்ணம் மனத்திற்குள் ஓடியது. இருந்தாலும், இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தை நான் ஏற்கனவே பார்த்திருந்ததால், கண்டிப்பாக இந்த பாகத்திலும் ஏமாற்ற மாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. இறுதியில், நான் எதிர்பார்த்ததை விட படம் மிகவும் நன்றாகவே இருந்தது.


இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில், போ (Jack Black) எப்படி டிராகன் வாரியார் (Dragon Warrior) ஆக தன்னை கண்டு கொள்கிறான் என்பதை சொல்லி இருப்பார்கள். இந்த பாகத்தில் போவின் பூர்வீகம் என்ன...? என்பதை அடிப்படையாக கொண்டு கதையை நகர்த்தி இருக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்தில், பல வருடங்களுக்கு முன் மயில் அரசனின் (Peacock King) மகனான ஷென் (Gary Oldman) மிகப் பெரிய ஆயுதம் ஒன்றை தயாரித்து தனது பலத்தினை நிரூபிக்க முயற்சி செய்கிறான். அதே நேரத்தில் கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட ஒருவரால் ஷென் தோற்கடிக்கப்படுவான் என்று அவனுக்கு தெரிய வருவதால், அது பான்டாவாகத்தான் இருக்கும் என்று நினைத்து அந்த இனத்தை அழிக்க நினைக்கிறான் ஷென். அதன் பின்னர் நிகழ்காலத்திற்கு திரைப்படம் திரும்புகிறது. போவின் குருவான ஷிபு (Dustin Hoffman) ஆழ்மன அமைதியை கற்று கொடுக்க முயற்சி செய்கிறார். அவனால் வழக்கம் போல செய்ய முடிவதில்லை. இந்த நிலையில் ஷென்னின் படை போவின் கிராமத்தை தாக்கி அங்கே இருக்கும் உலோகங்களை அபகரிக்க வருகின்றன. இதனை தடுத்து நிறுத்த போவின் நண்பர்களான டைகிரீஸ் (Angelina Jolie) மற்றும் மூன்று பேர் கொண்ட குழு விரைந்து செல்கிறது. இறுதியாக ஒரு ஓநாயுடன் சண்டை இடும் போது போவின் பெற்றோர்கள் பிம்பமாக கண்ணிற்கு தெரிய, தன்னை மறந்து நின்று விடுகிறான். அந்த இடைவெளியில், ஓநாய் போவின்  முகத்தில் ஒரு கும்மாங்குத்தை கொடுத்து விட்டு தப்பிவிடுகிறது.


அதன் பின்னர், தான் இந்த இடத்திற்கு எப்படி வந்தேன் என்றும் தனது பால்ய வயதில் நடந்தவற்றை பற்றியும் தனது வளர்ப்பு தந்தையிடம் கேட்கிறான் போ. அவரும் நம்ம தளபதி படத்தில் எப்படி ரஜினி சார் கூட்ஸ் வண்டியில் வந்தாரோ அதே போல ஒரு கதையை சொல்லுவார். அதற்கு மேல் போவின் பெற்றோர்கள் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்கிறார். இந்த நேரத்தில் மாஸ்டர் ஷிபுவிற்கு காங்மேன் சிட்டியில் (Gongmen City) இருந்து, ஷென் தான் உருவாக்கியுள்ள புதிய ஆயுதத்தால் குங்ஃபூ கலையை அழிக்கப்போவதாகவும், ஷென்னின் படைகளிடம் இருந்து தங்களை காப்பாற்றுமாரும் ஒரு செய்தி வருகிறது. இதனால் போவின் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு உடனே அங்கே கிளம்புகிறது. அங்கே போ தனது பெற்றோரை பற்றிய தகவலை எப்படி கண்டுபிடித்தான், மேலும் எப்படி ஷென் படைகளை முறியடித்தான் என்பதை திரைப்படத்தில் கண்டு மகிழுங்கள்.


திரைப்படம் முழுவதும் போ செய்யும் அசைவுகள் முதல் வசனங்கள் வரை அனைத்தும் நகைச்சுவை அட்டகாசங்கள். இந்த படத்தில் சண்டை காட்சிகள், மனதை நெகிழ வைக்கும் காட்சிகள் என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார்கள். படத்தின் கிராபிக்ஸ் வேலை பாடுகளுக்கு நிச்சயம் அதிகமாக உழைத்திருப்பார்கள். அவர்களின் உழைப்பு இறுதியில் வீண்போகவில்லை.

டிஸ்கி1:
நான் 3D அனுபவத்தை கொஞ்சம் ரசித்த திரைப்படம் இது ஒன்றாக தான் இருக்கும். இந்த திரைப்படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கலாம். இந்த திரைப்படத்தில் இறுதியாக சொல்ல வந்த நீதி எனக்கு பிடித்திருந்தது. படத்தின் நீதி இது தான், "Anything is possible If you have inner peace. Don't fight with your feelings, just let it flow. Then you will find the inner peace automatically".

டிஸ்கி2:
பெங்களூரில் புதிதாக தொடங்கியுள்ள ராயல் மீனாக்ஷி மாலில் (Royal Meenakshi Mall) இந்த திரைப்படத்தை பார்த்தேன். இந்த வணிக வளாகம் பன்னார்ஹட்டா சாலையில் உள்ளது.


இன்று தான் முதல் முறையாக இங்கு சென்றேன். இங்கே ஐந்து மாடி உள்ளது. ஐந்தாவது மாடி முழுவதும் திரை அரங்கதிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திரை அரங்கத்தின் வடிவமைப்பு எனக்கு பிடித்திருந்தது.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment