எனக்கு தெரிந்து கடந்த நான்கு வருடங்களாகத்தான் இந்தியாவில் நிதர்சன காட்சிகள் (Reality Show) அடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பிரபலமடைந்தது. ஆனால், அதற்கு முன்பே ஹாலிவுட்டில் இதை பற்றிய திரைப்படம் வெளிவந்து விட்டது. ஜிம் கேரியை பற்றி ஹாலிவுட் திரைப்படங்கள் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக தெரியாமல் இருக்காது. அவரது நகைச்சுவை கலந்த நடிப்பு அந்த அளவிற்கு பிரபலம். நான் முதல் முதலில் பார்த்த ஜிம் கேரி திரைப்படம் த மாஸ்க் (The Mask). அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் அவரின் திரைப்படங்களை பார்க்க ஆரம்பித்தேன். அந்த வகையில் நான் பார்த்து ரசித்த திரைப்படம் தான் த ட்ரூமேன் ஷோ (The Truman Show).
"காக்கை கூட உன்னை திரும்பி பார்க்காது, ஆனால் உலகமே உன்னை உற்று நோக்குவதாய் உணர்வாய்..." அப்படின்னு நம்ம கவிஞர் வைரமுத்து சொல்லியிருக்கார். ஆனால், இங்கே பிறந்தது முதல் தனது எல்லா நடவடிக்கைகளையும் உலகமே தொலைக்காட்சியில் பார்த்து ரசித்து கொண்டிருக்கிறது என்பதை உணராதவன் தான் ட்ரூமேன் (ஜிம் கேரி). ட்ரூமேன் வாழும் நகரம் முதல் அவன் தினமும் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் இந்த தொலைக்காட்சி தொடருக்காக செயற்கையாக அமைக்கப்பட்டவையே. இதில்அவரது மனைவியாக நடிக்கும் பெண்ணான மெரில் (Laura Linney) கூட அடக்கம். அவரை சுற்றி ஆயிரக்கணக்கான புகைப்பட கருவிகள் ட்ரூமேனிற்கு தெரியாமலே இயங்கி கொண்டிருந்தன. ட்ரூமேன் தான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களிடமும் காண்பிக்கும் உண்மையான செயல்பாடுகள், உணர்ச்சிகளை படம் பிடித்து உலகமெங்கும் ஒளிபரப்புவதே அந்த தொடரின் இயக்குநரான க்ரிஸ்டோஃப் (Ed Harris) வேலை.
ட்ரூமேன் வாழ்வதற்கு அமைக்கப்பட்ட அந்த நகரம் ஒரு தீவு போன்றது. அதிலிருந்து ட்ரூமேன் தப்பித்து செல்லாமல் இருக்க, எளிதில் அவர் உணர்ச்சிவசப்படும் படியாக, அவரது தந்தையை அங்குள்ள கடலில் ட்ரூமேன் அருகில் இருக்கும் போதே புயலில் சிக்கவைத்து இறந்து விடுவது போல ஒரு காட்சியை அரங்கேற்றி இருப்பார்கள். இந்த புயல், கடல் எல்லாமே அந்த நிகழ்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட செயற்கை அமைப்புகளே. இது தெரியாமல், தண்ணீரை கண்டாலே ட்ரூமேன் பயப்படுவார்.
ட்ரூமேன் கல்லூரியில் படிக்கும் போது ஸில்வியாவை (Noah Emmerich) அவருக்கு காதலியாக நடிக்க வைக்க முயற்சி செய்வார்கள். அந்த பெண்ணோ, உண்மையில் ட்ரூமேனை காதலிக்க தொடங்கி விடுகிறாள். அவரை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் நாடகம் என்பதை ட்ரூமேனிற்கு சொல்ல போக, அதனால் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து நீக்கி விடுகிறார்கள்.
அவளை, தொடரிலிருந்து நீக்கும் நிகழ்ச்சியையும் வியாபாரமாக ஆக்கியிருப்பார்கள். ஆனால், அது ட்ரூமேன் மனதில் ஒரு ஆராத வடுவை ஏற்படுத்தி விடும் [என்னதான் நடிப்பாக இருந்தாலும், அவருக்கு முதல் காதல் அல்லவா அது]. இதனால், தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட அவரது காதலி ஸில்வியா "ஃப்ரீ ட்ரூமேன்" என்ற ஒரு இயக்கத்தை தொடங்கி போராட்டத்தில் இறங்குகிறாள்.
பிறந்து முப்பது வருடங்கள் ஆனா பிறகு அங்கு தன்னை சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள், இடங்கள் அனைத்தும் செயற்கையாக இருப்பதை உணருகிறான். இவ்வாறு ட்ரூமேன் புரிந்துகொள்ளும்படியாக நடந்த அந்த நிகழ்ச்சிகள் என்ன? இறுதியில் எப்படி தனக்கு தெரியாமல் தன்னை ரசிக்கும் நிதர்சன தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (Reality Show) இருந்து வெளியேறுகிறார் என்பதை திரைப்படத்தில் கண்டுகளியுங்கள்.
0 மறுமொழிகள்:
Post a Comment