ஏதாவது புதிய படம் பார்க்க செல்வதற்கு முன்பு எந்த ஒரு ஊடகத்தின் வழியாவது எனக்கு அந்த திரைப்படத்தின் விமர்சனம் வந்து சேர்ந்து விடும். அதன் பிறகு தான் பெரும்பான்மையான திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். இந்த திரைப்படத்தின் விமர்சனமும் நேற்று மதியமே கிடைத்துவிட்டது. அவை அனைத்தும் படம் மொக்கை என்றே சொன்னது. இருந்தாலும் எனக்கு ஒரு பழக்கம் உண்டு, மொக்கை என்று கேள்வி பட்ட திரைப்படங்களை தனியே திரை அரங்கிற்கு சென்று பார்க்கும் பழக்கம் தான் அது. அதையும் மீறினால் அதிகபட்சமாக எனது நண்பன் பிரமோதை அழைத்து செல்வேன். அப்படி நாங்கள் பார்த்த குளிர் 100° என்ற படத்தை அவன் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டான் ஹி.. ஹி. இன்று அவன் ஊரில் இல்லாத காரணத்தால் தனியாக இந்த படத்தை பார்க்க சென்றேன். படம் மொக்கையா? இல்லையா? என்பதை இறுதியில் சொல்கிறேன். சரி நாம் இப்போது படத்திற்கு வருவோம்....
திரைப்படம் பாரிஸில் தொடங்குகிறது, இது ஒரு அழகான காதல் கதை என்று படத்தின் இயக்குனர் பிரபுதேவா தொடக்கத்தில் கூறி "எங்கேயும் காதல்" என்று ஆடி பாடி செல்கிறார். இந்த பாடலில் காதலிப்பவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை முடிந்தவரை காட்டியிருக்கிறார். அதில் வரும் பச்சை குத்தும் காட்சி எனக்கு நயந்தாராவை நியாபகப்படுத்தியது. வழக்கமாக கண்ட உடன் காதல் போன்ற படங்களை கதாநாயகனின் கண்ணோட்டத்தில் பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். இதில் கொஞ்சம் வித்தியாசமாக கதாநாயகியின் கண்ணோட்டத்தில் எடுத்திருக்கிறார்கள். படத்தின் நாயகன் கமல் (ஜெயம் ரவி) ஒரு இந்திய வாழ் தொழிலதிபர். வருஷத்தின் ஒரு மாதத்தை வெளிநாடுகளில் பெண்கள், விருந்து என்று கழிப்பவன். இவருக்கு பிடிக்காத ஒரே விஷயம் காதல். காதல் என்று எந்த பெண்ணாவது அவரை அணுகினால் அந்த இடத்தை காலி செய்துவிடுவார். இவர் இப்படி இருக்க, படத்தின் நாயகி கயல்விழி (ஹன்சிகா) கமலை பார்த்த முதல் நாளிலிருந்து உருகி உருகி காதலிக்க தொடங்கிவிடுகிறாள்.
கமலின் காதலை அடைய கயல்விழி முயற்சிகள் பல எடுக்கிறாள். கமல் இந்தியாவிற்கு கிளம்பும் போது ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து கொண்டு கையில் காதல் கடிதத்துடன் செல்ல, இறுதியில் அதை கொடுக்காமலே சென்றுவிடுகிறாள். மறுபடியும் ஒரு வருடம் கழித்து மீண்டும் பாரீஸ் வருகிறான் கமல். இந்த முறையாவது அவர்கள் காதல் ஒன்று சேர்ந்ததா [அதான் தெரியுமே, எப்படியும் சேர்ந்து விடுவார்கள் என்று] எப்படி சேர்ந்தார்கள் என்பதை திரைப்படத்தில் பாருங்கள்.
தீ இல்லை.. பாடல் வரிகள் ஒரு காதலனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். ஆனால், இந்த பாடல் வரும் நேரத்தில் கமலிற்கு காதல் மீது வெறுப்பு தான் இருக்கும். அதனால் தேவை இல்லாத கட்டத்தில் இந்த பாடலை உபயோகப்படுத்தி விட்டார்கள் என்றே தோன்றுகிறது. படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அருமையாக படமாக்கபட்டுள்ளது. குறிப்பாக நங்கை பாடலின் நடனம் அருமை.
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு மிகவும் அருமை. ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் ஏற்கனவே பிரபலமாகி விட்டது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் திமு..திமு, நெஞ்சில்..நெஞ்சில், எங்கேயும் காதல்..., நங்கை.., தீ இல்லை... மற்றும் லோலீட்டா... ஹி ஹி.. எல்லா பாடல்களும் எனக்கு பிடித்துவிட்டது. ஆமை வேகத்தில் செல்லும் திரைக்கதை தான், இருந்தாலும் பார்ப்பதற்கு கொஞ்சம் பொறுமை இருந்தால் கண்டிப்பாக ரசிக்கலாம். ராஜூ சுந்தரம் சிரிக்க வைக்க முயற்சி செய்து, பெரும்பாலும் தோல்வியே அடைகிறார். படத்தின் நாயகியை பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை, கொடுத்த வேலையை செய்திருக்கிறார். அவர் சில காட்சிகளில் ஒல்லியாகவும், சில காட்சிகளில் அந்த காலத்து குஷ்பு போலவும் தெரிகிறார். ஜெயம் ரவியின் நடிப்பு கச்சிதமாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தி இருக்கிறது. சங்க காலத்தில் புறா காதலுக்கு தூது விட பயன் படுத்தப்பட்டது. அந்த நுட்பத்தை இந்த படத்திலும் உபயோகப்படுத்தியிருந்த விதம் எனக்கு பிடித்திருந்தது.
திரைப்படத்தை தனியாக சென்று பார்த்தாலோ, இல்லை உங்கள் காதல் துணையுடன் சென்று பார்த்தாலோ படம் உங்களுக்கு பிடிக்க வாய்ப்புகள் இருக்கிறது. எனக்கு படம் பிடித்திருந்தது.
டிஸ்கி1:
இந்த திரைப்படத்தை தாவேரிக்கரை லக்ஷ்மி திரைஅரங்கத்தில் பார்த்தேன். படத்தின் ஆர்ம்பத்தில் தேசிய கீதம் திரையிடப்பட்டது. அனைவரும் எழுந்து நின்றதும், இறுதியில் பாரத மாதா வுக்கு ஜே போட்டதும் கொஞ்சம் பெருமையாக தான் இருந்தது.
டிஸ்கி2:
படத்தின் டைட்டில் போட்டு முடிப்பதற்குள் போதும்.. போதும் என்று ஆகி விட்டது. அதுவும் அந்த கல்பாதி அகோரம் மற்றும் சன் பிக்சர்ஸ் டைட்டில்ஸ் முடிவதற்குள் ஸ்..ஸ்..ஸப்பா தாங்க முடியல. இப்போ புரியுதா நான் படம் முடியும் வரை பொறுமையாக இருக்க எப்படி முன்பே சுதாரித்து கொண்டேன் என்று ஹி.. ஹி...
0 மறுமொழிகள்:
Post a Comment