சீதா லக்ஷ்மி - பாகம் 3

கடந்த வாரத்தை தவற விட்டவர்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...


பாகம் 3

"ஓ போகலாமே..."  என்று தான் பார்த்துக்கொண்டிருந்த பணிகளை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு எழுந்தாள். தான் அழைத்தவுடன் சீதா எந்த வித சாக்கு போக்கும் கூறாமல்  வந்ததால் ரகுவிற்கு ஆச்சரியம் தாளவில்லை. கையில் காஃபீ கோப்பையை எடுத்துக்கொண்டு ஐந்தாவது மாடியில் இருக்கும் தங்களது அலுவலகத்தில் இருந்து பெங்களூரு நகரத்தை நோட்டமிட்டவாறு நின்றுகொண்டிருந்தனர். அந்த வழியே செல்லும் சக நண்பர்கள் அவர்களை ஒரு வித சந்தேக கண்களோடு பார்த்து சென்றதை நோட்டமிட்ட ரகுவிற்கு உள் மனதில் ஒரு தயக்கம் வந்தது, ஆனால் சீதா இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை இது தான் சீதாவை பற்றி தெரிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பம் என்றுணர்ந்த ரகுவின் சிறு மூளை, பெரு மூளையை நோன்டியது. ஏற்கனவே சீதா தனது படிப்பு, குடும்பம் பற்றி சொல்லிவிட்டாள், இனி அவளிடம் என்ன கேட்கலாம் என்று அவளது காஃபீ கோப்பையை உற்றுப்பார்த்தான். அதை அவள் காலி செய்வதற்குள் ஏதாவது பேசவேண்டுமே என்ற பலத்த சிந்தனைக்கு பிறகு கேட்டான் "பெங்களூரில் எங்கெல்லாம் போயிருக்கீங்க..?". அவள் "எனக்கு பெங்களூரு இன்னும் அந்த அளவிற்கு பரிச்சயம் ஆகவில்லை" என்றும், "நண்பர்கள் யாரும் இல்லாததால் தனியாக செல்ல மனம் ஏனோ விரும்பவில்லை" என்றாள். மேலும், பெங்களூரில் அப்படி என்ன தான் வீஷேசம் என்று நீங்களே சொல்லுங்களேன் என்று சீதா, ரகுவிடம் கேட்டாள்.

ரகு தான் சுற்றி பார்த்த பல இடங்களின் பெயர்களை சொன்னான். அவளும் அதை கேட்டுவிட்டு, ரகுவின் நண்பர்களை பற்றி கேட்டாள். ரகு தனது நெருங்கிய நண்பர்களின் பட்டியலை அவளிடம் சொன்னான். "சீதாவிடம் இங்கே தமிழ் படங்கள் பார்க்க சென்று இருக்கிறீர்களா?" என்றான் ரகு. ஒரே ஒரு படம் மட்டும் தனியே பார்க்க சென்றதாக சொன்னாள். சீதாவிடம் அவளது கைப்பேசியில் வைத்திருக்கும் பாடல் பற்றி பேச தொடங்கினான். தனக்கு அந்த பாடல் மிகவும் பிடிக்கும் என்றும், அந்த பாடலை தனது கைப்பேசியுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டான் ரகு. ரகுவிடம் இந்த பாடல் ஏற்கனவே இருக்கிறது, இருந்தாலும் அவளிடம் இருந்து அதனை பெறவேண்டும் என்பதற்காக அப்படி கூறுகின்றான். எல்லாம் காதல் படுத்தும் பாடு. சீதா "ப்ளூடூத்" மூலம் உடனே ரகுவின் கைபேசிக்கு பாடலை அனுப்பி விடுகிறாள். அதன் பிறகு ரகுவின் கைப்பேசியை வாங்கி அதில் என்ன பாடல்கள் எல்லாம் இருக்கின்றன, என்று ஒவ்வொரு பாடலாய் கேட்டு விட்டு, கிடைத்த ஒன்றிரண்டு இளையராஜா பாடல்களை தனது கைப்பேசிக்கு அனுப்பி கொண்டிருந்தாள். ரகு தனது கைப்பேசியை இது நாள் வரை யாரிடமும் கொடுத்தது இல்லை, இன்று தான் முதல் முறையாக அதுவும் ஒரு பெண்ணிடம் கொடுத்திருக்கிறான். நான்கு பாடல்கள் பரிமாறி கொண்ட பிறகு அவர்களது காஃபீ தீர்ந்து போனதால், அவர்களது இருக்கைக்கு திரும்பினார்கள்.

பழகிய சில நேரத்தில் இவ்வளவு நெருக்கமாக ஆகிவிட்டதால், சீதா ஒரு முற்போக்கு வகை பெண் என்று மனதில் நினைத்து கொண்டான் ரகு. மதிய நேரத்தில் தனது கைப்பேசியில் "சார்ஜ்" குறைந்து போனதால் சீதாவிடம் சென்று "சார்ஜர்" இருக்கிறதா என்று கேட்டான் ரகு, அவள் தனது "சார்ஜர்" "சோனி எரிக்சன்" வகை, அது "நோக்கியா" வகை கைப்பேசிக்கு பொருந்தாது என்கிறாள். அது வரை யாரிடம் பேசி பழகாதவள், அன்று முதல் முதலாக ரகுவிற்காக தனது இருக்கைக்கு அருகில் இருப்பவர்களிடம் "நோக்கியா" வகை "சார்ஜர்" இருக்கிறதா? என்று விசாரித்தாள். சீதாவின் இந்த உதவி செய்யும் மனப்பான்மை ரகுவிற்கு பிடித்துபோனது. ஒரு வழியாக, சீதா தனக்கு கிடைத்த "சார்ஜர்"ஐ ரகுவிடம் கொடுத்தாள். ரகு அதனை உபயோக படுத்திவிட்டு சாயங்காலம் அதனை சீதாவிடம் திருப்பி கொடுக்க சென்றான். அவள் தனது பணியில் கொஞ்சம் மும்மூரமாக இருந்தாள். ரகு தனது இருக்கைக்கு அருகில் வந்து நின்றதும் சீதாவின் பணிகள் அனைத்தும் தனிச்சையாக அடங்கின. ரகு சீதாவிடம் நன்றி சொன்னான், சீதா புன்னகையுடன் "சார்ஜர்"ஐ வாங்கி வைத்து கொண்டு "காஃபீ குடிக்க செல்வோமா?" என்று கேட்டாள். ரகு உற்சாகத்துடன் போகலாமே என்பது போல தலையை ஆட்டினான்.

இந்த முறை மனதில் எந்த நடுக்கமும் இன்றி உரையாடலை தொடங்கினான் ரகு. "நீங்கள் கண்ணாடி அணிவீர்கள் தானே..?" என்று கேட்டான் சீதாவிடம். அவளும், "ஆமாம் நான் கண்ணாடி அணிவேன், ஆனால் அலுவலகத்திற்கு வேலைப் பளு குறைவாக இருந்தால் மட்டும் தான் அணிவேன்" என்றும் கூறுகிறாள். என்ன காரணம் என்று ரகு கேட்டான். அதற்கு அவள், வேலைப் பளு குறைவாக இருந்தால் சில நேரங்களில் தூங்கி விடுவேன். அப்போது கண்களில் பொறுத்தும் "காண்டக்ட் லென்ஸ்" அணிவது கடினம் என்றாள். "அது சரி நான் கண்ணாடி அணிவது எப்படி உங்களுக்கு தெரியும்" என்றாள் சீதா. உங்கள் கங்கலை சுற்றியுள்ள மெல்லிய கருவலையம் தான் காட்டி கொடுத்தது என்றான் ரகு. கண்ணாடி அணியுங்கள் அது தான் கண்களுக்கு நல்லது, "காண்டக்ட் லென்ஸ்" அடிக்கடி அணிந்தால் கண்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்றான் ரகு. சீதா அப்போதைக்கு தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

மறுநாள் காலை 9 மணி, சீதாவின் இருக்கையில் யாரோ அமர்ந்திருப்பதை தூரத்தில் இருந்து வரும் போது நோட்டமிட்டான் ரகு. அருகில் வந்த  பிறகு தான் தெரிந்தது அது சீதா என்று. இதற்கு முன்பு வரை சீதாவை அவன் கண்ணாடி அணிந்து பார்த்ததில்லை, இதுவே முதல் முறை. கண்ணாடியில் அவளது முக அழகு மேலும் மெருகேறியதை ரகுவின் கண்கள் மட்டுமே உணர்ந்தன. இதுநாள் வரை கண்ணாடி அணியாதவள் தான் சொன்ன ஒரு வார்த்தைக்காக கண்ணாடி அணிந்து வந்தது ரகுவின் மனத்திற்குள் சந்தோசத்தை கொடுத்தது. இருவரும் காஃபீ அருந்த சென்றனர். அப்போது ரகு சீதாவிடம் கண்ணாடியில் மிகவும் அழகாக இருப்பதாக கூறினான். இன்றைக்கு வேலைப் பளு குறைவு, அதனால் தான் கண்ணாடியில் வந்தேன் என்று மிகவும் கஷ்டப்பட்டு ஒரு பொய்யை உதிர்த்தாள். அந்த பொய்யை, ரகு மனத்திற்குள் மிகவும் ரசித்தான்.

(பின் தொடருங்கள்...)

டிஸ்கி:
இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment