சீதா லக்ஷ்மி - பாகம் 1

நான் கல்லூரியில் படிக்கும் போது, விடுதியில் பொழுது போகாமல் இரண்டு சிறு கதைகள் எழுதிய நியாபகம். அதனை எனது நண்பர்கள் பிரமோத் மற்றும் நாகராஜன் படித்து விட்டு வார இதழ்களுக்கு அனுப்புமாரு சொன்னார்கள். அப்போது "நாம் என்ன அந்த அளவிற்கா நன்றாக எழுதுகிறோம்?" என்று எனக்குள் நினைத்து சிரித்து கொண்டேன் . அதன் பிறகு இப்போது தான் கதை (மாதிரி) எழுதுகிறேன். பார்க்கலாம் எப்படி போகும் என்று....

 பாகம் 1


அது தான் ரகுவிற்கு வங்கியில் முதல் நாள். புதிய இடம், புதிய முகங்கள் என முதல் இரண்டு வாரங்கள் மாட்டு வண்டி வேகத்தில் ஊர்ந்து சென்றது. மூன்றாவது வாரத்தின் புதன் கிழமை அன்று தான் அவளை முதல் முறையாக பார்க்க நேர்ந்தது. அவளது பெயர் சீதா லக்ஷ்மி. இதற்கு முன்னர் சென்னையை சேர்ந்த இதே வங்கியின் கிளை பிரிவில் இருந்து மாற்றலாகி பெங்களூரு கிளைக்கு வந்திருக்கிறாள். மூன்று வாரங்கள் வெறுமையாக இருந்த ரகுவின் இருக்கைக்கு பக்கத்து இருக்கை அவளது வருகைக்காக தான் காத்திருக்கிறது என்று அவனுக்கு தெரியாது போல. கடந்த இரண்டு வாரங்களாக அவனது ரசனைக்கு ஒத்து வராத நவ நாகரீக மங்கையர்களை மட்டுமே அந்த அலுவலகத்தில் பார்த்திருந்த ரகுவிற்கு சீதாவை பார்த்த முதல் நொடியே காதல் பற்றிக்கொண்டது. சில விஷயங்கள் பார்த்தவுடன் நமக்கு பிடித்து விடும் காரணம் என்னவென்று உள் மனத்திற்கு கூட தெரியாது. அதற்கு காரணம் அவள் சூடி இருந்த மல்லிகையா? அதை தாங்கி நிற்கும் நீண்ட கூந்தலா? பிறை போன்ற நெற்றியா? அதன் கீழே நட்சத்திரமாய் மின்னும் வெள்ளை கல் மூக்குத்தியா? என குறிப்பிட்டு அவனால் யூகிக்க முடியவில்லை. ஒரு வேளை பதினைந்து ஆண்டுகளாக வேலை பார்க்காமல் இருந்த ஹார்மோன்களை இவை அனைத்தும் சேர்ந்து ஒரே நேரத்தில் தட்டி எழுப்பியது கூட காரணமாக இருக்கலாம்.

முதல் மூன்று வாரங்கள் அவளை பார்த்துக்கொண்டேகழித்தான் ரகு. அவளுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பதை வைத்து அவளும் தமிழ் பெண்தான் என்று உறுதி செய்துகொண்டான். இயல்பாகவே பெண்களுடன் பேசுவதை தவிர்பவன் ரகு. காரணம், அவனது பள்ளி பருவத்தில் ஏற்பட்ட காதலும் அதை தொடர்ந்த தோல்வியும் தான். இதுதான், ரகுவின் பதினைந்து வருட ஹார்மோன்களின் வேலை நிறுத்தத்திற்கு காரணமும் கூட. ரகு இப்படி இருக்க, சீதா இந்த அலுவலகத்திற்கு வந்து மூன்று வாரங்கள் ஆகியும் யாருடனும் நெருங்கி பழகுவதில்லை. தேநீர் அருந்த சென்றாலும் சரி, மதிய உணவிற்கு சென்றாலும் சரி, தனியாகவே செல்கிறாள். இதனை பல நாட்களாக கண்கானித்து கொண்டு இருக்கிறான் ரகு. பணி விஷயத்தில் ரகு மிகவும் கெட்டிக்காரன். பணி நிமித்தமாக மற்றவருக்கு உதவும் குணமும் உடையவன். ரகு மற்றவர்களுக்கு உதவி செய்வதை தனது ஓரக்கண்ணால் அடிக்கடி சீதா நோட்டமிட்டு கொண்டிருப்பாள், இதை ரகுவும் கவனித்திருக்கிறான். ரகுவும் தமிழ் மொழி பேசுவதை, அவன் பேசுவதை வைத்து தெரிந்து வைத்திருந்தாள். மேலும், அழைப்புகளுக்கு சீதாவின் கைபேசி எழுப்பும் அந்த இசை ரகுவிற்கு மிகவும் பிடித்த ஒன்று. அதனால், சீதாவிற்கு கைப்பேசியில் அழைப்பு வரும்போதெல்லாம் தனது பணியை அப்படியே போட்டுவிட்டு, அவளது காதுகளுக்கு கைப்பேசியை கொடுக்கும் வரை பணியை மறந்து விடுவான். அதன் பின்னர், அவள் பேசி முடிக்கும் வரை தன்னையே மறந்து விடுவான். காரணம் அவளது மழலை போன்ற குரலுக்கும் ரகு அடிமையாகி விட்டான் என்பது தான். சீதாவும், ரகு தொலைபேசியில் வாடிக்கையாளர்களிடம் பேசும்போது கூர்ந்து கவனித்து கொண்டிருப்பாள். மேலும், அவன் தனது வாடிக்கையாளர்களை கையாளும் விதத்தை அவள் ரசித்து கொண்டிருப்பாள். உண்மை என்னவென்றால், இவர்கள் இருவரும் மனதுக்குள்ளே ஒருவரை ஒருவர் காதலித்து கொண்டிருந்தனர். இருந்தாலும், சீதாவுடன் உரையாடலை தொடங்குவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறான் ரகு.

அந்த நாள் அன்று தான் வந்தது. மதிய உணவு கொடுத்த மயக்கத்தில் அலுவலகத்தில் அனைவரும் அரை தூக்கத்தில் பணியாற்றும் நேரம். திடீரென ரகு என்று ஒரு குரல் அழைக்க இன்ப அதிர்ச்சிகளை அடக்கி கொண்டு திரும்மி பார்த்தால் சீதா அவனது இருக்கைக்கு அருகில் நின்றுகொண்டிருந்தாள். அப்போது தான் அவளை மிக மிக அருகில் பார்க்கிறான் ரகு. பார்த்தவுடன் தோன்றும் காதலுக்கு மருந்து, அந்த பெண்ணை இன்னும் கொஞ்சம் அருகில் உற்று பார்க்கவேண்டும் என்று யாரோ சொன்ன நியாபகத்தில், வைத்த கண் வாங்காமல் சீதாவை பார்த்தான் ரகு. அது நோயின் வீரியத்தை அதிகரித்ததே தவிர குறைக்கவில்லை. அவளது கண்களை சுற்றி இருக்கும் மெல்லிய கருவலையங்களை பார்க்கும் போது, கண்டிப்பாக இவள் பல வருடங்களாக கண்ணாடி அணிபவள், மேலும் தற்போது கண்ணுக்குள் பொறுத்தும் ஆடிகளை அணிந்திருக்கிறாள் என்பதை கண்டு பிடித்துவிட்டான். அவளது முன் வரிசை தெற்று பற்கள் அவளின் முக அழகை கூட்டியதே தவிர குறைக்கவில்லை. ஒரு வேலை ஹார்மோன் செய்யும் சூழ்ச்சியாக இருக்குமோ என்று ரகு தனக்குள் கேட்டு கொண்டான். அதன் பின்னர் மெல்ல சுதாரித்து கொண்டு "என்ன விஷயம்?" என்று தமிழில் கேட்டான் ரகு. "உங்களுக்கு தமிழ் தெரியுமா?" என்று கொஞ்சம் ஆச்சரியத்தை செயற்கையாக பொருத்திக் கொண்டு கேட்டாள் சீதா. பெண்கள் பொய் சொல்லும் போது மிக அழகாக தெரிவார்கள் என்று ரகுவிற்கு அன்று தான் தெரியும் போல. அவள் தொடர்ந்தாள், தனது கணிப்பொறியில் இணையம் வேலை செய்யவில்லை என்றாள், முடிந்தால் கொஞ்சம் உதவ முடியுமா என்று ரகுவிடம் கேட்டாள். ரகு MBA பட்டப்படிப்புடன் கணிப்பொறி பற்றிய அறிவும் உடையவன். அதனால் தயங்காமல் எழுந்து சென்று உதவி செய்தான். அவளும் பதிலுக்கு நன்றி கூறினாள். ரகு மீண்டும் தனது இருப்பிடத்திற்கு வந்து அமர்ந்து கொண்டான்.

உடனே கையில் இருந்த குறிப்பேட்டில் இருந்து ஒரு தாளை கிழித்து நான்கு கவிதைகளை வரிசையாக கிறுக்கினான். பதினைந்து வருடங்களுக்கு பிறகு இன்று தான் கவிதை எழுதுகிறான் ரகு. எப்படியாவது தான் மனதில் இருக்கும் காதலை இன்று பணி முடிந்து அவள் செல்லும் போது சொல்லிவிட்டு இந்த கவிதை கிறுக்கல்களையும் அவளிடம் சேர்த்துவிடவேண்டும் என்று நினைத்து கொண்டான். மாலை ஆறு மணி ஆனது, அவள் கிளம்புவதாக இல்லை, ஆனால் தனக்கு பேருந்திற்கு நேரம் ஆவதை உணர்ந்தான் ரகு. அதனால், மெல்ல தனது உடைமைகளை தோள் பையிற்குள் புகுத்தி விட்டு, மறு கையில் எழுதி வைத்திருந்த கவிதை தாளை நடுக்கத்துடன் பிடித்து கொண்டு அவளது இருக்கையை அடைந்தான்.

(பின் தொடருங்கள்...)


டிஸ்கி:
இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே.

SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment