ஜெயா நகர் நான்காவது ஒன்றியம் [Jeyanagar 4th Block]

இன்றைய பொழுதை எப்படி கழிப்பது என்று காலை ஆறு மணி முதல் பலத்த சிந்தனை. இறுதியில் குழப்பம் மட்டுமே மிஞ்சியது. சுமார் 11.30 மணிக்கு நண்பர் பரிதி மற்றும் நண்பர்களுடன் ஜெயா நகர் நான்காவது ஒன்றியம் (Jayanagar 4th Block) செல்வது உறுதியானது. நண்பர் பரிதி, தோழி நாயகி மற்றும் தோழி ஆஷா ஆகியோருடன் முதலில் "பவானி கங்கன் ஷாப் (Bhavani Kangan Shop)" என்ற கடைக்குள் நுழைந்தோம். கடையில் மூன்று மாடி முழுவதும் பெண்கள் வாங்கும் அலங்கார பொருட்கள் மற்றும் ஆபரணப் பொருட்கள் நிரம்பி இருந்தது. நெத்தியில் வைக்கும் பொட்டிற்கு ஒரு மாடி, வளையல்களுக்கு ஒரு மாடி, கழுத்தில் மாட்டும் ஆபாரணங்களுக்கு ஒரு மாடி என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். இங்கு ஏற்கனவே தோழி கோமதியின் திருமணத்திற்காக சில அலங்கார பொருட்கள் வாங்க வந்திருந்தோம். அப்போது இங்கே மூச்சுவிடக்கூட இடம் இல்லாத அளவிற்கு பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆங்காங்கே சில ஆண்களின் தலைகள் அத்தி பூத்தாற்போல் தெரிந்தது. ஆனால், இன்று கொஞ்சம் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதனால் கொஞ்சம் சுலபமாக அனைத்து மாடிகளிலும் ஏறி இறங்க முடிந்தது. இத்தனை நெருக்கடியான கடையில் பொருட்கள் எளிதாக களவாடப்படுமே என்று நினைத்தால், கண்காணிப்பதற்காக அனைத்து மாடியிலும் CCTV கேமரா வைத்துள்ளனர். வாய்ப்பு கிடைத்தால், இங்கே உங்கள் தோழி, காதலி, மனைவி, அம்மா, என்று உங்களுக்கு தெரிந்த மங்கையர்கள் அனைவருக்கும் அலங்கார மற்றும் ஆபரணப் பொருட்களை வாங்கி கொடுக்கலாம். ஆனால், அவர்கள் கூட மட்டும் சென்று விடாதீர்கள். ஏனென்றால், அவ்வளவு எளிதில் அந்த கடையை விட்டு வரமாட்டார்கள். அந்த அளவுக்கு வித்தியாசமான மாடல்களில் பொருட்கள் உள்ளன. ஒரு வழியாக, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சில பொருட்களை வாங்கி விட்டு வெளியே வந்தோம்.

அங்கே சாலையோரத்தில் விற்றுகொண்டிருந்த பன்னீர் பழம், நாவல் பழம் மற்றும் பிலம்ஸ் பழங்களை வாங்கி ருசித்தோம். சாம்பிள் பார்க்க, தோழி ஆஷா ஒரு பெரிய பன்னீர் பழத்தை கேட்டார், அதை கேட்ட கடைக்காரர் கொஞ்சம் கடுப்பாகி எங்களை பார்த்து ஒரு டெரர் லுக் விட்டார். மேலும் ஒரு பழத்தை பார்த்து அதன் பெயரை கேட்டார் தோழி நாயகி, நான் அரளி விதை என்று சொல்ல (அது பார்ப்பதற்கு அப்படி தான் இருந்தது.. ஹி..ஹி..), கடைக்காரர் மேலும் கடுப்பானார்.

அடுத்ததாக நண்பர் பரிதி அங்கே ஒரு தோல் செருப்பு வகை கடை இருப்பதாகவும், அங்கே நல்ல தரமான செருப்பு வகைகள் இருப்பதாகவும் சொன்னார். அதனால் அங்கே படை எடுத்தோம். நான் எனக்கு இரண்டு காலணி ஜோடிகளை வாங்கினேன். விலை கொஞ்சம் மலிவாகவும் பொருட்கள் தரமாகவும் இருந்தது என்பது எனது கருத்து. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். இந்த கடையின் பெயர் "SS லெதர்ஸ்". இந்த கடையில் ஆண்களுக்குகான காலணிகள் மட்டுமே கிடைக்கும் என்பது உப தகவல்.

பசி வயிற்றை கிள்ளியது, மணி வேறு மதியம் இரண்டு ஆகி விட்டது. சரி நண்பன் பிரமோத்தை கைப்பேசியில் தொடர்பு கொண்டு எங்கே சாப்பிடலாம் என்று யோசனை கேட்டேன். அங்கே மையாஸ் (MAIYA'S) ஹோட்டலுக்கு சென்றால் குஜராத்தி வகை சாப்பாடு நன்றாக இருக்கும் என்று ஆலோசனை சொன்னான். ஆனால், அங்கே கூட்டம் அலை மோதியதால் அதற்கு பக்கத்தில் இருந்த கோலாபூரி என்ற ஹோட்டலுக்கு சென்று மதிய உணவை முடித்து கொண்டோம். அந்த ஹோட்டலில் பரிமாறிய "மட்டன் கோலபூரி" வகை நன்றாக இருந்தது (நான் குழம்பை மட்டும் ருசித்தேன், ஹோட்டல்களில் நான் மட்டன்  சாப்பிடுவதில்லை). இந்த ஹோட்டலுக்கு சென்றால் இதை முயற்சி செய்து பாருங்கள்.

அடுத்ததாக, தோழி நாயகி மேலும் சில உடைகள் வாங்க இருந்ததால் பயணத்தை கடைவீதிக்கு தொடர்ந்தோம். நண்பர் பரிதி, வீட்டில் விரிக்கும் தரை விறிப்பை வாங்கினார். தோழி நாயகியும் பெண்களுக்கான ஆடைகள், காலணிகள் என வாங்கி கொண்டார். இறுதியில் ஒரு வழியாக அனைத்தும் முடிந்து வீட்டிற்கு கிளம்பினோம்.


வரும் வழியில் பார்த்த இன்னொரு நிகழ்ச்சி எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த காலத்தில் பெங்களூரு நகரில் குழந்தைகளுக்கு பள்ளிகளில் படிக்க அனுமதி வாங்க பெரிய வரிசையில் நிற்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், அந்த பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடைகள் வாங்கவும் நீண்ட வரிசையில் நிற்க வேண்டும் என்பதை இன்றுதான் நேரில் கண்டேன். காலம் எப்படி மாறி விட்டதென்று நினைத்து எனக்குள் சிரித்து கொண்டேன்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment