சீதா லக்ஷ்மி - பாகம் 7

கடந்த பாகத்தை தவற விட்டவர்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...


பாகம்7

இரண்டு வாரங்கள் சீதாவும் ரகுவும் பேசிக்கொள்ளவே இல்லை. ஒரு நாள் மாலை வேலை சரண்யா, ரகுவின் இருக்கைக்கு  சென்றாள். "என்னுடன் காஃபி அருந்த வருவீங்களா?" என்று ரகுவிடம் கேட்டாள் சரண்யா. ரகு போகலாமா? வேண்டாமா? என யோசிக்க தொடங்கிய நொடிப்பொழுது, சரண்யா இடைமறித்து "வரமாட்டேன் என்று மட்டும் சொல்லாதீர்கள்" என்று மெல்லிய குரலில் ரகுவை விழித்தாள். ரகுவால் அதற்கு மேல் யோசிக்க முடியாமல் அவளுடன் நடக்க தொடங்கினான். சீதா இதையெல்லாம் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

இருவரும் காஃபி கோப்பைக்குள் வெறித்து பார்த்தபடி இரண்டு நிமிடங்களை கரைத்தார்கள்.. "பேசலாமா..?" என்றவாறு சரண்யா தனது மௌனத்தை முதலில் கலைத்தாள். ரகுவும் "...ம்ம்" என்றான். அதன் பின்னர் சரண்யா கேட்டாள், "உங்களுக்கும் சீதாவிற்கும் ஏதாவது பிரச்சனையா..? சில வாரங்களாக நீங்களும் சீதாவும் சரியாக பேசிக்கொள்வதில்லை, எங்களுடன் காஃபி அருந்த வருவதில்லை. என்னிடமாவது சொல்லலாம் அல்லவா?" என்று வினவினாள். "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, கொஞ்ச நாட்களாக வேலை பழு அதிகம். அதனால் தான் முன்பு போல என்னால் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை" என்றான் ரகு. "என்னால் இதை நம்ப முடியாது, இது உங்களுக்கும் தெரியும். எது எப்படியோ, நான் ஏன் உங்களிடம் நெருங்கி பழகுகின்றேன் என்று உங்களுக்கு தெரியுமா??" என கேட்டாள் சரண்யா. "என்ன கேள்வி இது? நீ இந்த அலுவலகத்திற்கு புதியவள், அது போக நாம் இருவரும் ஒரே அலுவலகத்தில் பணி புரிகிறோம். பணி நிமித்தமாக உதவிகள் தேவை படும் போது ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து கொள்ளலாம்" என்றான் ரகு. "அது சரி தான், அதற்கு தான் இங்கே பல பேர் இருக்கிறார்களே? பிறகு ஏன் உங்களிடம் மட்டும் கேட்கவேண்டும்?" என்றாள் சரண்யா. "ஆமாம், சரிதான். ஏன் என்னிடம் மட்டும் கேட்க வேண்டும். இப்படி பொடி வைத்து பேசுவதை நிறுத்திவிட்டு நேரடியாக விஷயத்திற்கு வருகிறாயா?" என்றான் ரகு. "...ம்ம் சரி, சென்ற வருடம் எங்கள் வீட்டில் ஒரு தூக்கமான சம்பவம் நடந்தது. உங்கள் வயதில் எனக்கிருந்த ஒரே ஒரு அண்ணன் விபத்தில் இறந்துவிட்டார். அவர் வழக்கமாக இரண்டு சக்கர வாகனப் பந்தயங்களில் கலந்து கொள்பவர். அப்படி ஒருநாள் பந்தயத்தில் வேகமாக வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்" என்றாள். "இன்றோடு அவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது. அவருடைய பெயரும் ரகு தான். மேலும் பார்ப்பதற்கு கிட்டதட்ட உங்களை போலவே இருப்பார். அதனால் தான் உங்களுடன் நான் கொஞ்சம் நெருங்கி பழகுகின்றேன்" என்றாள் சரண்யா.

சரண்யாவிற்கு எப்படி சமாதானம் சொல்வதென்று தெரியாமல் விக்கி தவித்தான் ரகு. "கவலை படாதே.. என்னை உன் சகோதரன் போல நினைத்துக்கொள். உனக்கு ஆட்சேபணை இல்லை என்றால் என்னை நீ 'அண்ணன்' என்றே அழைக்கலாம் என்றான்" ரகு. "சரி அண்ணா" என்றாள் சரண்யா. "இப்பொழுதாவது உண்மையை சொல்லுங்கள், உங்களுக்கும் சீதாவிற்கும் என்ன பிரச்சனை?" என்று மீண்டும் வினவினாள். சரண்யாவின் மீது நம்பிக்கை வந்ததால் உண்மையாக நடந்த விஷயங்களை சொன்னான் ரகு. "உங்கள் இருவருக்குள்ளும் இவ்வளவு விஷயம் நடந்திருக்கிறதா?" என்று ஆச்சரியத்தில் கண்கள் விரிய வினவினாள் சரண்யா. "இனிமேல் கவலையை விடுங்கள் அண்ணா, உங்கள் பிரச்சனைக்கு முதலில் முடிவு காண்போம். முதலில் சீதாவிற்கு இரண்டு சக்கர வாகனம் மீது எதற்கு இவ்வளவு வெறுப்பு என்று கண்டு பிடிப்போம், அதன்பிறகு இதற்கு ஒரு நல்ல முடிவை கண்டுபிடிப்போம்" என்றாள் சரண்யா. "சரி, ஆண்டவன் விட்ட வழி" என்று பெருமூச்சு விட்டபடி ரகு அங்கிருந்து நகர ஆரம்பித்தான். சரண்யாவும் அவனை பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.

சரண்யா அவளுடைய இருக்கையில் அமர்ந்த நொடி பொழுதில் சீதா அங்கு வந்தாள். "எங்கே சென்றாய்..? உன்னை எங்கெல்லாம் தேடுவது" என்றாள் சீதா. நானும், ரகு அண்ணாவும் என்று சொல்ல வந்தவள், அவற்றை விழுங்கி விட்டு "நானும் ரகுவும் காஃபி அருந்த சென்றோம்" என்றாள். இப்பொழுதே அண்ணன் என்று சொல்லிவிட்டால் இவர்களுடைய காதலை சேர்த்து வைக்கும் ஒரு துருப்பு சீட்டை இழக்க நேரிடும் என்பதை அவள் மனது உணர்த்தியதுதான் அதற்கு காரணம். "சரி, என்னுடன் நீ காஃபி குடிக்க வரவில்லையா?" என்றாள் சீதா. இப்பொழுதுதான் குடித்தேன், இருந்தாலும் பரவா இல்லை, துணைக்கு நானும் வருகிறேன் என்று சீதாவுடன் கிளம்பினாள் சரண்யா.

(பின் தொடருங்கள்...)

டிஸ்கி:
இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment