The Next Three Days

கடந்த வருடம் ரஸ்ஸல் குரோவ்(Russell Crowe) நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இது. பியூட்டிஃபுல் மைண்ட் மற்றும் கிளாடியேட்டர் திரைப்படங்களில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் ராஸ்ஸல் குரோவ். அந்த அளவிற்கு புகழ்பெற்றது அவரது நடிப்பு. அதே போல இந்த திரைப்படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இனி திரைப்படத்தை பற்றி பார்ப்போம்...


படத்தின் தொடக்கத்தில் ஜான் பிரன்னன்(Russell Crowe) யாரையோ தனது காரில் அவசரமாக அழைத்து செல்வது போல காட்டுகிறார்கள். அது யார் என்று தெரிவதற்குள் மற்றொரு காட்சிக்கு நகர்கிறது படம், அந்த காட்சியில் ஜான், அவருடைய மனைவி லாரா பிரன்னன்(Elizabeth Banks) , லாராவின் அலுவலக மேற்பார்வையாளர் மற்றும் அவருடைய கணவன் என நான்கு பேரும் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். யதார்த்தமாக பேசிக்கொண்டிருக்கும் போது லாராவிற்கும் அவரது மேற்பார்வையாளருக்கும் வாய் தகராறு வருகிறது. பிரச்சனை என்னவென்றால், அலுவலகத்தில் ஒரு பெண்ணின் மேற்பார்வையில் மாற்றொரு பெண் வேலை பார்ப்பதை விட, ஒரு பெண்ணின் மேற்பார்வையில் ஒரு ஆண் பணி புரிவது அலுவலகத்தின் வளர்ச்சிக்கு நல்லது என லாராவின் மேற்பார்வையாளர் சொல்ல, இல்லை என்று லாரா மறுக்க, பின்னர் விளையாட்டாக உன் கணவர் ஜான் என்னுடன் வேலை பார்த்தால் உனக்கு புரியும் என்று லாராவின் மேலாளர் சொல்ல, அவர்களுக்குள் வார்த்தை தகராறு வந்துவிடுகிறது. அதன் பின்னர் ஜானும், லாராவும் அங்கிருந்து வீட்டுக்கு சென்று விடுகின்றனர். லாரா வீட்டில் உள்ள பொருட்களை சரி படுத்திக்கொண்டிருக்கும் போதுதான் கவனிக்கிறாள், அவளின் மேலாடையில் இரத்த கறை இருப்பதை. அதனை அவள் கழுவி கொண்டிருக்கும் போது, அவர்கள் வீட்டுக்கு திடீரென காவல் துறை அதிகாரிகள் வருகின்றனர். லாராவின் மேற்பார்வையாளரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்வதாக கூறி லாராவை இழுத்து சென்று விடுகின்றனர்.


லாராவிற்கு ஆயுள் தண்டனை வழங்கி சிறைச்சாலைக்கு அனுப்பி விடுகின்றார்கள். லாரா குற்றமற்றவள் என்பதை மனப்பூர்வமாக நம்புகிறான் ஜான். அதனால் லாராவை விடுவிக்க வழக்கறிஞர்கள் உதவியை நாடுகிறான் ஜான். ஆனால், சாட்சிகள் அனைத்தும் லாராவிற்கு எதிராக இருப்பதால் அவர்களும் கைவிட்டு விடுகிறார்கள். லாராவை அடிக்கடி சிறைச்சாலைக்கு சென்று தனது மகனுடன் சந்திக்கிறான் ஜான். இறுதியாக லாரவை சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க வைப்பதை தவிர வேறு வழி இல்லை என முடிவெடுக்கிறான். இதற்காக ஏழு முறை சிறைச்சாலையில் இருந்து வெற்றிகரமாக தப்பித்த டேமேனிடம்(Liam Neeson) ஆலோசனை பெறுகிறான் ஜான். இதற்காக சிறைச்சாலையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் வேவு பார்க்கிறான் ஜான். நகரத்தில் எப்போதெல்லாம் நெருசல் குறைவாக இருக்கிறது, மொத்தம் எவ்வளவு நேரம் நகரத்தை விட்டு வெளியேற எடுக்கும், அப்படியே வெற்றிகரமாக தப்பித்து விட்டால் எந்த நாட்டிற்கு செல்லலாம், அதற்கு உண்டான பாஸ்போர்ட் மற்றும் இதர விஷயங்களை தயார் செய்கிறான் ஜான். பல வழிகளை யோசித்துவிட்டு இறுதியாக ஒன்றை முடிவு செய்கிறான். அதன் படி, சிறையில் இருக்கும் கைதிகளுக்கு மருத்துவ சோதனை நடந்த பின் அளிக்கும் அறிக்கையில் மாற்றம் செய்து தனது மனைவிக்கு கைப்பெர்கலேமா என்ற நோய் இருப்பதாக காட்டிவிட்டால் அவளை சிறைச்சாலையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றுவார்கள். அப்படி இட மாற்றம் செய்யும் போது லாராவை தப்பிக்க வைத்துவிடலாம் என்று முடிவெடுக்கிறான் ஜான்.


இறுதியில் ஜான் போட்ட திட்டத்தை எப்படி நிறைவேற்றினான்..? படத்தின் தொடக்கத்தில் ஜான் தனது காரில் கொண்டு சென்றது யாரை...? லாரா மற்றும் தனது மகனுடன் தப்பித்து நாட்டை விட்டு சென்றானா...?  உண்மையில் லாரா அந்த கொலையை செய்தாளா...? என்பதை திரைப்படத்தில் கண்டுகளியுங்கள்.

SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment